சகோதரிகள் அட்டகாசம் – குழப்பத்தில் வட்டுக்கோட்டை பிளவத்தை அ.த.க பாடசாலை!

Thursday, January 10th, 2019

சித்தன்கேணி பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு குந்தகமாக செயற்படும் இரு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்கள்.

சித்தன்கேணி பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இன்று  (10) காலை 7.00 முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

சுமார் 200 வருடங்களை எட்டவுள்ள இந்தப் பாடசாலையில் பல தலைமுறைகளாக ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில் தற்போது கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் சகோதரர்கள்.

இந்த இரு ஆசிரியர்களும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், மாணவர்களுக்கு வழிகாட்டலுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்றும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தரம் 1 முதல் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெறுவதுடன், 50 மாணவர்கள் கல்வி பயில்வதுடன்  7 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றார்கள்.

இந்த நிலையில் இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இந்த சகோதர ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளதுடன் மாணவர்களுக்கு நன்றாக கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

மாணவர்களை வழிநடத்த தவறும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது அந்த இரு ஆசிரியர்களையும் பாடசாலையில் கற்பிக்க இடமளித்துள்ளதுடன் ஏனைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய எத்தணிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே இந்த இரு ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கி ஏனைய ஆசிரியர்களை இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் 200 வருடத்தை எட்டவுள்ள இந்தப் பாடசாலை பல தலைமுறைகளை உருவாக்கியுள்ளமையினால் இந்தப் பாடசாலையை மூடுவதற்கான ஏற்பாடுகளை நிறுத்த கோரியும் சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு மேலாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

IMG_0090

IMG_0096

IMG_0119

Related posts: