கொழும்பு இரவு விடுதிகளில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த சாணக்கியனுக்கு எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் அருகதை கிடையாது – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, September 9th, 2022

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, கொழும்பு இரவு விடுதிகளில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த சாணக்கியனுக்கு எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் அருகதை கிடையாதென சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எம்மை தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்..

தான் சபையில் இல்லாத சமயத்தில் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

மேலும் – “2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, கொழும்பு இரவுவிடுதிகளில் சாணக்கியன் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே நாங்கள் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும் செய்யத் தொடங்கிவிட்டோம்.

அப்பொழுதெல்லாம் இரவுவிடுதிகளுக்குள் முடங்கிக் கிடந்த தம்பி சாணக்கியன், இப்போது தன் சுயநல அரசியலுக்காக எம்மை விசர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள், மருத்துவமனைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், விளையாட்டுக் கழகங்கள் என பல உதவிகளைச் செய்திருக்கிறோம்.

இவற்றில் பலவற்றை அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் நேரில் பார்த்தே இருக்கமாட்டார். அப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிக்கு எம்மைப்போன்ற மக்கள் சேவகர்களை விமர்சிக்கும் எந்தவோர் அருகதையும் கிடையவே கிடையாது.

பிள்ளையான் என்பவர் அன்று தொடக்கம் இன்றுவரை தான் கொண்ட கொள்கையில் மாற்றமின்றி, கட்சித் தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவரது கட்சி நிகழ்வில் நாம் கலந்துகொள்வது தார்மீகக் கடமையும்கூட. நிலைமை அப்படியிருக்கையில், அலரி மாளிகைக்கு அடிக்கடி வந்து எம்மோடு தேநீர் அருந்துவதும், நிலையான அரசியல் கொள்கையின்றி கட்சித்தாவி சுயநலத்துக்காக தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதையும் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

இதனிடையே நாங்கள் இப்பொழுதும் எமக்கு வாக்களித்த மக்களைப் பயமின்றிச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால், புலம்பெயர் தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும், இலண்டன் கூட்டத்தை இரத்து செய்யும் நிலையேற்பட்டதையும் சாணக்கியன் மறந்துவிடக்கூடாது” என்றும் நாமல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: