கொள்ளையர்களின் இலக்கு பெண்கள் வயோதிபர்களே!

Sunday, December 24th, 2017

வடக்கின் பலபகுதிகளிலும் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொள்ளைச் சம்பவங்கள் பெண்கள் வயோதிபர்கள் தனித்துள்ளவர்களின் வீடுகளை இலக்கு வைத்தே இடம்பெறுகின்றன.

இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தி கொள்ளைக் கும்பலைக் கூண்டோடு கைது செய்யவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;

தமிழருடையது என்று மார் தட்டிக் கொள்ளும் வடக்கு மாகாணத்தில் இன்று அனைவராலும் பேசப்படும் விடையமாகக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மூலை முடுக்கெங்கும் நாளாந்தம் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. கொள்ளையிடுதலில் நெருக்கமாக உள்ள வீடுகள் தவிர்க்கப்படுகின்றன. தனிமையில் இருக்கும் வீடுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. அதிகாலை நள்ளிரவு நேரங்களிலேயே கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றனர். ஆழ்ந்த தூக்கம் கொள்ளையடிப்பதற்கு வசதிகளைக் கொடுக்கின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் இவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

வவுனியாவில் ஆசிகுளம் கோவில்குளம் பட்டைகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் தனிமையில் வீதியில் செல்லும் பெண்களின் நகைகள் கொள்ளையர்களால் அறுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முள்ளியவளைப் பகுதிகளில் பெண்கள் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இதன் போது வீட்டில் உள்ளோர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலும் வயோதிபர்கள் உள்ள வீடு இலக்கு வைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பரவலாக கொள்ளைகள் இடம்பெறுகின்றன. சாவகச்சேரி சங்கானை பருத்தித்துறை தாவடி பண்டத்தரிப்பு சித்தன்கேணி வட்டுக்கோட்டை அல்லைப்பிட்டி என கொள்ளைகள் தொடர்கின்றன. இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அனைத்திற்கும் ஒரு குழுவே முதன்மையானது என சந்தேகிக்கப்படுகிறது.

அண்மையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வடக்கில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர். கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் எனவும் அவர் மீது 40 வரையான பிடியாணைப் பிறப்பிப்புக்கள் உள்ளன எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி எம்.டி.சந்திரபால தெரிவித்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டு சில நாள்களிலேயே அல்லைப்பிட்டி சங்கானை ஆகிய இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. எனவே ஒருவர் இருவரைப் பிடித்து எந்தப் பலனும் இல்லை. கூட்டத்தையே பிடிக்கவேண்டும்.

மக்களுடைய ஒத்துழைப்புடன் அவர்களுடைய தகவல்களைப் பெற்று கொள்ளையர்களைப் பிடிக்கவேண்டும். ஆனால் பொலிஸார் அவ்வாறில்லை. கொள்ளையர்கள் என்ற பேரில் அப்பாவி இளைஞர்களைக் கைது செய்கின்றனர். இதனால் கொள்ளையர்கள் இலகுவாகத் தப்பித்து விடுகின்றனர். பொலிஸார் இந்த விடயத்தில் தீவிரமாகச் செயற்படவேண்டும் என்றனர்

Related posts: