கொள்ளுப்பிட்டி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் நிதியுதவி -நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Friday, October 6th, 2023

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

இதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை தெனியாய நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குளியாப்பிட்டி நகருக்கு அருகில் கரத்திப்பல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 15 மாணவர்களும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.. காயமடைந்தவர்கள், குளியாப்பிட்டி, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ ௲ கஜூகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கொள்கலன் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: