கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இலங்கையிலும்தொற்றாளர்களின் எண்ணிக்கை 170ஆகஉயர்வு!

Sunday, April 5th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முன்பதாக ஏற்கனவே இன்றையதினம் ஒருவர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று அடையாளர் காணப்பட்டுள்ளமையால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் இன்னமும் தலைமறைவாகி உள்ளதாக வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாகவும் சுகாதார அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் புனானி கொரோனா தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்டபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் திகதி தென்கொரியாவில் இருந்து விரும்பிய குறித்த நபர் விமான நிலையத்திலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து மார்ச் 24ஆம் திகதி தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

வீடு திரும்பிய 10 நாட்களின் பின்னர் வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளினால் நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: