கொரோனா தொற்றால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 29th, 2021

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 103 ஆண்களும் 109 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 394 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 57 ஆயிரத்து 580பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிபர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய இஸ்லாமிய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது..

இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 34 வயது பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந் தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: