கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது – நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று நோயியல் நிபுணர் தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான காலப்பகுதி, செலவு மற்றும் ஏனைய காரணிகள் ஆகியவை இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான காரணியின் அடிப்படையில், இந்த வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர் .தடுப்பூசியானது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறை மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசி கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் ஒரு தொகுதி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள போதிலும், எஞ்சிய தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் பாரிய நிதியை செலவழிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது அறியக் கிடைக்கும் விலை நிலவரத்தின் அடிப்படையில், கொரோனா தடுப்பூசி ஒன்றின் இலங்கை பெறுமதி 1,500 ரூபா முதல் 4,500 ரூபா வரை காணப்படும் என, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருட காலப்பகுதிக்கு மாத்திரமே குறித்த தடுப்பூசியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு தடுப்பூசி என்ற வகையில் வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் இது கொரோனா தடுப்பூசிக்கான கேள்வியை அதிகரிக்கும் எனவும், இவ்வாறான அதிகரித்த கேள்வியை எந்தவொரு நிறுவனமும் பூர்த்தி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் சக்திவாய்ந்த நாடொன்று அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தால், அது தடுப்பூசிக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி நாடுகளுக்கிடையே நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதி செய்யவும், உலக சுகாதார ஸ்தாபனம் பொறிமுறையொன்றை தயாரித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: