கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு – இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு!

Thursday, May 18th, 2023

கையேந்தி வாழும் நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அபிவிருத்தியின் பிரதான இலக்காக இருக்கவேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவனின் அழைப்பின் பேரில், மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கஸந்துரையாடலில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் தாம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக விளக்கினர்.

பிரதானமாக, கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றம், குடியேறியவர்களுக்கான வீடு, வாழ்வாதாரம் மற்றும் இதர வசதிகள் பற்றி இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இவை தவிரவும், பெண்கள்-சிறுவர் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், கடற்றொழில், போதை ஒழிப்பு, இளைஞர் வலுவூட்டல் உள்ளிட்ட தாம் மேற்கொள்ளும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் ஒவ்வொரு நிறுவனங்களும் விளக்கிக் கூறினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சரின் இணைப்பாளர் றுஷாங்கன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் போர் அழிவுகள் காரணமாகவே மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றனர் என்பதை நினைவூட்டியதுடன், போர்க்காலத்துக்கு முன்னர் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தன்னிறைவான வாழ்வைக் கொண்டிருந்தனர் எனபதைச் சுட்டிக் காட்டினார்.

எனவே, இவர்களை தொடர்ந்தும் கையேந்து நிலையில் வைத்திருக்காமல், முன்னர் போன்ற தன்னிறைவான பொருளாதார அபிவிருத்தி நிலைக்கு இட்டுச் செல்லவேண்டும் எனவும், அந்த இலக்கை எட்டுவதே அபிவிருத்திப் பணிகளின் இலக்காக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதனையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் என்பதையும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: