கைதிகளுக்கு உதவும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை – அமைச்சர் தலதா அத்துக்கோரள!

Saturday, July 28th, 2018

எந்த சண்டியராக இருந்தாலும் அதிகாரிகளின் உதவியில்லாமல் சிறைச்சாலையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. வெள்ளை ஆடுகளுடன் சில கறுப்பு ஆடுகளும் இருப்பதுபோல் சிறைச்சாலைகளுக்குள்ளும் கறுப்பு அதிகாரிகள் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்வாங்கமாட்டோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள கூறினார்.

75 இலட்சம் ரூபா செலவில் மறுசீரமைக்கப்பட்ட வெலிகடை சிறைச்சாலை கற்கை நிலையம் மற்றும் வாசிகசாலை கட்டட திறப்பு விழாவும் வெலிகடை கைதிகளின் இலக்கிய கலை படைப்பான ‘சிபிரி கே பாமுல’ வெளியீட்டு விழாவும் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்தில் நடைபெற்றது.  இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

யாரும் வேண்டுமென்றே குற்றம் புரிவதில்லை. இந்த சிறைச்சாலையில் 3000 கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களிலும் 2800 வெள்ளை ஆடுகள் இருந்தால் மீதியுள்ள 200 பேர் கறுப்பாடுகளாக இருக்கலாம். அதனால்தான் சமூகம் தவறாகப் பார்க்கின்றது. இதனை நாம் வெளியே இருக்கும்போது சிந்திக்க வேண்டும்.

பத்திரிகைகள் சிறைச்சாலை தொடர்பில் எழுதுகையில் முழு சிறைச்சாலை திணைக்களத்துக்கும் கரை படிகின்றது. அதற்கு பொறுப்பாகவுள்ள எனக்கு வேதனையாகவுள்ளது. வெள்ளை அதிகாரிகளும் கறுப்பு அதிகாரிகளும் இருக்கலாம். உலக சிறைச்சாலைகளில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். வெலிகடை, பூஸ்ஸ, அகுணகொலபெலஸ்ஸ, சிறைச்சாலைகளுக்கு மேற்பார்வையிட சென்றோம். இந்த திணைக்கள அதிகாரிகள் குறித்து பலவிதமான தகவல்கள் எமக்கு வருகின்றன. என்ன தகவல்கள் கிடைத்தாலும் நாம் சரியானதையே செய்வோம்.

அதேவேளை தவறானவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். நான் சிறைச்சாலையில் உள்ள நிலைமையை திருத்த முயற்சி செய்கின்றேன். அதற்காக ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சரவையினதும் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. நாம் விடயங்களை ஆராய்ந்தபோது அவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.

சிறைச்சாலை திணைக்களத்துக்குள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயங்கமாட்டோம். சில கைதிகள் நல்லது கெட்டதை அறிந்திருந்தும் தவறு செய்கின்றார்கள். அது அவர்கள் முன்செய்த கர்மவினையென்று கூறவேண்டும். மிக சுறுசுறுப்பான ஒழுக்கமுள்ள சிலரைப் பற்றி தகவல்களை ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்ய தண்டனையை குறைக்க திட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றோம்.

திட்டமிட்டு கொலை குற்றங்கள் மற்றும் கொலை செய்தவர்களுக்கல்ல ஏனையோர் பற்றியே விசேட கவனம் செலுத்தவுள்ளோம். சிலரை அவர்களின் வீடுகளில் ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாதவர்களும் இருக்கின்றார்கள். இங்குள்ள வயதானவர்களின் பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருக்கலாம். அதில் சிலர் பெற்றோர்களை ஏற்க விரும்பாதவர்களும் இருக்கலாம். தெரிந்துசெய்தாலும் தெரியாமல் செய்தாலும் எல்லோரும் மனிதர்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

Related posts: