கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபை பலியிடப்படுகின்றது!

Sunday, April 17th, 2016

முதலமைச்சரையும், அமைச்சர்களையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. இது தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக  அவர் மேலும் தெரிக்கையில் –

வடக்கு மாகாணசபைக்கு வாக்களித்த தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டதாகவும் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பினர் அர்த்தமற்ற தீர்மானங்களை நிறைவேற்றி காலத்தை வீணடித்து வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உட்கட்சி முரண்பாடுகளாலும், அரச அதிகாரிகளை சரியான வழிநடத்தும்  இயலாமையினாலும் வடக்கு மாகாண சபையை முடக்கி வைத்திருந்ததாலும் தமிழ் மக்களுக்கும், யுத்தத்தினால் அழிந்த தமிழர் தாயகத்திற்கும் கிடைத்த நன்மைகள் எதுவுமில்லை.இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், வட மாகாண சபையை பொறுப்பேற்றவர்களுக்குள்ளும் இருந்துவந்த உள்ளக முரண்பாடுகள் இன்று அம்பலமாகியிருக்கின்றன.

இப்போது முதலமைச்சரை பதவி கவிழ்க்க வேண்டும் என்றும், முதலமைச்சரே தகுதிகளை ஆராய்ந்து தெரிவு செய்த மாகாண அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே அதிருப்திகள் வெளிக்கிளம்பியுள்ளன.

வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றவர்கள் அந்த நிர்வாகத்தை தமிழ் மக்களின் அரசியல் இலக்கு நோக்கி முன்னகர்த்தும் ஆற்றலற்றவர்கள் என்றும், மாகாண சபை அதிகாரங்களை உச்சபட்சமாக பிரயோகித்து, யுத்தத்துக்கு முகம்கொடுத்த தமிழ் மக்களின் வாழ்வியலையும், பொருளாதாரத்தையும் மீளக்கட்டியெழுப்பும் விருப்பமற்றவர்கள் என்றும் ஈ.பி.டி.பி தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்த இவர்கள், தத்தமது அரசியல் பெருமிதங்களுக்காவும், தமது குடும்பங்களின் சுகபோகங்களுக்காகவுமே அந்த அதிகாரங்களை பிரயோகித்து வருகின்றார்கள். இந்த நிலையில் முதலமைச்சரையும், அமைச்சர்களையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையாக இருப்பதிலும், குழுக்களின் பிரதித்தலைமையாக இருப்பதிலும், மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுக்களில் இணைத்தலைமையாக இருப்பதிலும் கூட தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் இல்லை என்பது சிந்திக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts: