கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவது நல்லது – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Friday, May 8th, 2020

மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் -.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குங்கள், தொடர்ந்தும் அவற்றை வெறுமனையாகவே வைத்திருக்கமுடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவ்வாறான கோரிக்கைகளை மகிந்தவிடம் வலியுறுத்த முன் புதங்களை கண்ணாடியின் முன்னால் நின்று பார்த்துவிட்டு முன்வைப்பதே வலுவானதாக இருக்கும்.

ஏனெனில், இன்று மாகாணசபைகள் எவையும் மக்கள் பிரதிநிதிகளினால் ஆட்சி செய்யப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியில் உள்ளதற்கான முழுப் பொறுப்பினையும் கடந்த அரசும் அதற்கு முட்டுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

மாகாணசபை சட்டத்தின் பிரகாரம் ஒரு மாகாணசபை கலைந்து இரண்டு மாதங்களிற்குள் புதிய மாகாணசபைக்கான தேர்தலை நடத்த வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாணசபை தேர்தல் திருத்தசட்ட மூலம் ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொண்டுவந்தது. இத்தேர்தல் சட்டதிருத்தத்திற்கு அமைவாக புதிய தேர்தல் முறையானது 50 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும்,  50 வீதம் தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கும். அத்திருத்தச்சட்டத்திற்கு அமைவாக தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயகுழு அமைக்கப்பட்டு அக்குழுவானது தனக்கு விதிக்கப்பட்ட காலவரையறைக்குள் அதனது அறிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி உள்ளுராட்சி அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை  2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24ம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததன் காரணமாக தோல்வியடைந்தது. அத்தேர்தல் திருத்தசட்ட விதிகளுக்கு அமைய அவ்வாறு பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தால் பிரதமர்தலைமையில் மீளாய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் ரணில் தலைமையில் ஐந்துபேர் கொண்ட குழு ஒன்று சபாநாயகரினால் அமைக்கப்பட்டது.

தேர்தல் சட்டதிருத்த மூலத்திற்கு அமைய பிரதமர் தலைமையிலான மீளாய்வுக்குழு தனது மீளாய்வு அறிக்கையினை இரண்டு மாதங்களிற்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய பிரதமர் ரணில் மீளாய்வுக்குழுவினை பாராளுமன்றம் கலையும்வரை முறைப்படி கூட்டவும் இல்லை, அறிக்கை சமர்ப்பிக்கவும் இல்லை. இதுவே இன்று மாகாணசபை தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் ஆகும்.

மாகாணசபை அதிகாரம் வேண்டும் என முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், இருக்கின்ற அதிகாரங்களை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சிகளும் எடுக்காது மௌனிகளாக இருந்து கடந்தகால அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுத்துவிட்டு இப்போது கூக்குரல் போடுவதில் அர்த்தம் இல்லை. ஜனநாயகம் ,சட்ட ஆட்சி என்பன நாட்டில் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என ஓலம் இடுபவர்கள், எதற்காக இரண்டு மாதங்களிற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என சட்ட ஏற்பாடு இருந்தும் அப்போதய பிரதமர் அதைன அப்பட்டமாக மீறியமைக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Related posts: