குடிநீர் வழங்கலுக்காக பூநகரி பிரதேச சபையினால் செலவிடப்படும் எரிபொருள் செலவுகளை மீள செலுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளனவா?  – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 20th, 2016

பூநகரி பிரதேச சபையானது நீண்டகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் இடம்பெயர்ந்து, முற்றுமுழுதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச சபையாக உள்ளதால் மேற்படி பிரதேச சபைக்கான வருமானங்கள் போதியளவு இல்லாத நிலையே இயங்கிவருகின்றது.

இருந்தும் குறித்த பகுதி மக்களுக்கான குடிநீர் வழங்கலுக்காக கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் செலவீனமாக ஏறக்குறைய நான்கு இலட்சம் ரூபா நிதியை இந்த பிரதேச சபை செலவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த குடிநீர் வழங்கல் காரணமாக பூநகரி பிரதேச சபையினால் செலவிடப்பட்டுள்ள மேற்படி எரிபொருள் செலவுகளை பிரதேச சபைக்கு மீள செலுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளனவா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது குறித்த பகுதி மக்களது குடிநீர் விடயம் தொடர்பாக பல விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா நீர் வழங்கலுக்காக பிரதேச சபை செலவு செய்த நிதி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் குறித்த விடயத்தை வினவியுள்ளார்.

இதுதொர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில் –

குறித்த பிரதேச சபைக்கு எதிர்வரும் காலங்களில் தற்காலிக ஏற்பாடாக தொடர்ந்தும் தடையின்றி இத்திட்டத்தை செய்வதற்கு ஏதேனும் நிதி உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், முழங்காவில், நாச்சிகுடா, கரியாலை, நாகபடுவான் ஆகிய கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டமும், ஜெயபுரம் மற்றும் வலைப்பாடு ஆகிய கிராம மக்களுக்கு குடிநீரை வழங்கும் நோக்கத்தில் கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டமும் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக்கப்பட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.

முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டம் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியுமா? என்பதுடன் ஜெயபுரம், வலைப்பாடு கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் என்பன எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது பற்றி குறிப்பிட முடியுமா? என கோரியதுடன் எனது இக் கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts: