கூட்டமைப்புக்கு கிடைத்த 32 கோடியில் நடந்த அபிவிருத்தி எங்கே? – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கேள்வி!

Tuesday, January 30th, 2018

யுத்தத்தால் அழிந்து கிடந்த வடக்கு மாகாணத்தை நாம் எவ்வாறு தூக்கி நிறுத்தி அபிவிருத்தியால் கட்டி எழுப்பியிருந்தோமோ அதே போன்றதொரு ஒளிமயமான நிலையை கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ள இப்பகுதி மக்களும் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவார்களாயின் நிச்சயம் செய்து காட்டுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் திருமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமானதும் யதார்த்தமானதுமான வழிமுறையூடாகவே தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற  நம்பிக்கையோடு தான் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நாம் இற்றைவரை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனாலும் அதற்கு எமக்கு போதிய அரசியல் பலம் இதுவரை இல்லாது காணப்படுகின்றது. இதனால்தான் தீர்க்கப்படக் கூடிய பல பிரச்சினைகளும் இன்னும் தீர்வின்றிக் காணப்படுகின்றது. ஆனாலும் வடபகுதியில் குறிப்பாக யாழ்.மாவட்ட மக்கள் எமக்கு தந்த அரசியல் பலத்தினூடாக நாம் வடக்கில் பல்வேறு பெரும்பணிகளை செய்து சாதித்துக்காட்டியிருக்கின்றோம். அந்தவகையில் கிழக்கு மாகாண மக்களும் வரவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் இருந்து எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்து எமக்கு தமது அரசியல் பலத்தை தருவார்களேயானால் நிச்சயம் வடபகுதியைப்போன்று கிழக்கு மாகாணத்திலும் எமது மக்களை ஒரு ஒளிமயமான நிலைக்கு இட்டுச் செல்வோம்.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தமிழ் மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காக, தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்திற்காக வழங்கப்பட்ட 32 கோடி ரூபா நிதியில் இப்பகுதி மக்களுக்காகச் செய்த அபிவிருத்திகள் என்று பார்த்தால் ஒன்றையுமே காணமுடியாது உள்ளநிலைமையே காணப்படுகின்றது.

எனவே மக்கள்மீது அக்கறையும் மக்களது வேதனைகளையும் வலிகளையும் உணர்ந்து மக்களுக்காக பணியாற்றிவரும் எமது கரங்களை வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வலுப்படுத்துங்கள். நாம் உங்களது எதிர்காலத்தை நிச்சயமாக ஒளிமயமானதாக உருவாக்கிக் காட்டுவோம் என்றார்.

Related posts: