கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் – இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்றது!!

Friday, October 1st, 2021

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை, யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு, பூநகரி கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இன்றையதினம்(01-10-2021) காலபோக நெற்செய்கைக்கான வயற்காணிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம்,, கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் பகீரதன், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர் இணைந்து சீட்டிழுப்பு முறையில் சுமார் 100 ஏக்கர் காணியை பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்தனர்.

கௌதாரிமுனை பிரதேசத்திற்கு கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சென்றிருந்தபோது அந்தப் பகுதியிலுள்ள வயற்காணிகளை தமக்கு பெற்றுத்தருமான கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் பகீரதன் தலைமையில் பிரதேச பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின் பேரில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், காணி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர் தலைமையில் பயனாளிகள் தெரிவை மேற்கொண்டு, தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் காணிகளை நெற்செய்கைக்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்தும் வகையில், 2.7 மில்லியன் ரூபா செலவில் காணியை உழுது, பண்படுத்தி, வரம்பு கட்டும் பணிகளை, கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் தேவரதன் மேற்கொண்டிருந்தார்.

இதன்படி, பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பணியாளர்கள் இணைந்து காணியை தயார்ப்படுத்தி, சீட்டிழுப்பு முறையில் பயனாளிகளுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சீட்டிழுப்பின் மூலம் காணிகள் பயனாளிகளுக்கு பிரிக்கப்பட்டு, தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பணியாளர்களால் காணிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்திக் கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவுதினமான இன்றையதினம் இந்த நிகழ்வு நடைபெற்றவேளை சிறிதளவு மழை வீழ்ச்சியும் காணப்பட்டதால், உடனடியாகவே விதைப்பில் ஈடுபட்டு காலபோகச் செய்கையில் ஈடுபடுவதற்கான இயற்கையின் வாழ்த்தும் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக முதல் தடவையாக இந்தக் காணிகளில் நெற்செய்கையில் ஈடுபடவுள்ள கௌதாரிமுனைப் பிரதேச மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

000

Related posts: