கிளிநொச்சியில் தேங்கிய பூசணிக்காயை சந்தைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, May 5th, 2021

கிளிநொச்சி மாவட்டம் கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியிருந்த சுமார் 75 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கமைய, மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஒருங்கிணைப்புக்குழுவின் சக இணைத்தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் பேசி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக 50,000 கிலோகிராம் பூசணிக்காயை கொழும்பு மனிங் சந்தைக்கு எடுத்துச்செல்ல வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாய திணைக்களம் இந்தப் பூசணிக்காயை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

கண்ணகைபுரம் பகுதிக்கு நேரில் சென்ற ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர்,

பூசணிக்காயை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடி அனைத்து விவசாயிகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் பூசணிக்காயை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதற்கு மேலதிகமாக முப்படையினருக்குமான உணவுப்பொருள் கொள்வனவில் ஈடுபடும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் ஒரு தொகுதி பூசணிக்காயை விற்பனை செய்வது தொடர்பாகவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தடன், நேரடியாக பூசணிக்காயைச் சந்தைப்படுத்துவதற்கு மேலதிகமாக, பூசணிக்காயை அடிப்படையாகக் கொண்ட பெறுமதிசேர் உற்பத்திகளைத் தயாரிககும் சிறுகைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும், அந்தப் பகுதி இளைஞர் மற்றும் மகளிர் விவசாய அமைப்புக்களுடனும் அவர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்

Related posts: