கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு புதிய என்ஜின் ஏற்பாடு செய்வதற்கு இணக்கம்!

Wednesday, August 31st, 2022

கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு புதிய என்ஜின் ஒன்றை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜுலை 11ம் திகதி முதல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் சேவையை ஆரம்பித்த கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதம், அடிக்கடி என்ஜின் கோளாறு காரணமாக கால தாமதமாகி வருவதாக பயணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர்.

நேற்றையதினம் மாலை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பும்போது, பளைப் பகுதியில் இயந்திரக் கோளாறு ஏற்பாட்டு கொடிகாமத்துடன் யாழ்ராணியின் சேவை இடைநிறுத்தப்பட்டது.

அதன்பின்னர், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவியின் யாழ்ராணியின் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால், நாளாந்தம் தொழில் நிமித்தம் யாழ்ராணியில் கிளிநொச்சி சென்றுவரும் அலுவலர்கள் பலரும் பாதிக்கப்பட்டதுடன், குறிப்பாக தூர இடங்களிலிருந்து பயணிக்கும் பெண் அலுவலர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பில், அவரது மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன், புகையிரத திணைக்கள் வட்டாரங்களுடன் கலந்துரையாடியதையடுத்து, இன்று காலை தற்காலிகமாக புதிய என்ஜின் பொருத்தப்பட்டு வழமைபோன்று கிளிநொச்சிக்கான யாழ்ராணி சேவை சுமுகமாக நடாத்தப்பட்டது.

காலை 9.45க்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் யாழ்தேவி புகையிரதத்தின் என்ஜினே தற்காலிகமாக யாழ்ராணிக்கு மாற்றப்பட்டு சேவை தடையின்றி முன்னெடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றிரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலையில் யாழ்ப்பாணம் வந்த இரவு புகையிரத சேவையின் என்ஜின் மூலம் கொழும்புக்கான யாழ்தேவி புகையிரத சேவை காலை 9.45க்கு நடாத்தப்பட்டது.

கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்தின் என்ஜின் மேலதிக திருத்தப் பணிகளுக்காக அனுராதபுரம் எடுத்துச்செல்லப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படும் என்று வட பிராந்திய புகையிரத சேவைகள் ஒருங்கமைப்பாளர் வசந்துர அமைச்சரின் மேலதிக இணைப்பாளருக்குத் தகவல் தந்தார்.

இதேவேளை, புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் செனவிரத்ன அவர்களுடனும் இது விடயம் தொடர்பில் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் தொடர்புகொண்டு பேசியதையடுத்து, கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு நிரந்தரமாக புதிய என்ஜின் ஒன்றை வழங்குவதற்கு புகையிரத திணைக்களத்தின் சார்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகளுக்கான கேள்வி அதிகரித்து புதிய சேவைகள் பலவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் என்ஜின்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், எனினும், நிலைமையைச் சமாளித்து கூடிய விரைவில் கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு நிரந்தரமாக சிறந்த என்ஜினை வழங்க ஏற்பாடு செய்வதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் செயலாளரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கனிடம் உறுதியளித்துள்ளார்.

Related posts: