கிராமப்புறப் பாடசாலைகளுக்குத்துறை சார்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர்!

கிராமப்புற பாடசாலைகளுக்கு பாடங்களுக்கு துறைசார்ந்த ஆசிரியர்கள் குறைவாக நியமிக்கப்படுவதனால் பாடசாலையை முழுமையாக நம்பி கல்வி கற்கும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பாடத்துறை சார்ந்த ஆசிரியர்களில் முக்கியமாக ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கிராமப்புற பாடசாலைகளில் போதியளவு ஆசிரியர்கள் இல்லை என அதிபர்கள், பெற்றோர்கள் கவலை அடைகின்றனர். இன்றைய காலகட்டத்தில் ஆரம்பப் பிரிவு மாணவர்களை வலுவாக வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஆரம்பப் பிரிவு என்பது மிக முக்கியமான காலப்பகுதியாகும். இங்கு சரியான முறையில் அடிப்படைக் கல்வியைப் பெறாதவர்களே இடை நிலைப் பிரிவில் கல்வி கற்க தவறுகின்றார்கள்.
இதனைக் கருத்திற்கொண்டு சிறப்பு தேர்ச்சி மிக்க ஆசிரியர்களை ஆரம்பப் பிரிவுகளில் நியமனம் செய்தல் வேண்டும். உலக நாடுகளிலே அதிக பட்டங்களை (கல்வித் தகமைகள்) தமது நாட்டு மொழி கல்விக்கொள்கைக்கிணங்க பெற்றவர்களே ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி வழங்க நியமிக்கப்படுகின்றார்கள்.
ஆனால் எமது மாகாணத்தில் மேலதிகமாக உள்ளவர்களை ஆரம்பப் பிரிவுக்கு ஆசிரியர்களாக நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது. நுண்கலை ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் கடமை புரிந்து காலத்தை முழுமை செய்த பின்னர் தமது சொந்த வலயங்களில் ஆசிரியராக கடமையாற்ற பாடம் சார்ந்த வெற்றிடம் இல்லை என மறுக்கப்பட்டு ஆரம்பப் பிரிவுகளில் அதிக வெற்றிடம் உள்ளது எனவே அந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும் என கடிதம் மூலம் அறிய தந்தால் ஆசிரியராக கடமையாற்ற முடியும் என சில வலயக்கல்வி பணிமனை அறிவுறுத்தியுள்ளமை ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தாலும் வடமாகாணத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தீர்வாக அமையாது.
பெரிய பாடசாலை (1AB) நிர்வாகம் தமது செல்வாக்கை பயன்படுத்தி முறைசார்ந்த ஆசிரியர்களை நியமித்துக் கொள்கின்றனர். ஆனால் சிறிய கிராமப் புற பாடசாலைகளுக்கு துறைசார்ந்த ஆசிரியர்கள் இல்லாமையால் வறிய மாணவர்களின் ஆற்றல்கள் நீரில் கரையும் உப்புபோல அழிவடைந்து விடுகின்றது.
இதனால் சிறிய பாடசாலைகளில் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளதுடன் பாடசாலை நிர்வாக கட்டமைப்பும் சிதைகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வறிய மாணவர்களின் கல்வியை வரட்சியாக்காது செழிப்புமிக்கதாக மாற்ற பாடத்துறைசார்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
Related posts:
|
|