காவற்துறை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில்!

Wednesday, March 25th, 2020

நாடு பூராகவும் தற்போது காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 அச்சுறுத்தல் பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அந்த மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹாவில் நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் பொருட்களின் கொள்வனவுக்காக அலைமோதியமை, கொரோனா பரவலை கட்டுப்படுவதற்கு தடையாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உணவு பொருட்கள், மருந்துபொருட்கள், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுவீடாக விநியோகிப்பதற்கான பொறிமுறை இன்று முதல் இயங்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ஷவின் தலைமையிலான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான சகல வாகனங்களுக்கும் அனுமதியுண்டு என்றும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: