காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Thursday, August 25th, 2016

காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ்களை அவர்களது உறவினர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சட்ட மூலம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, இந்த சட்ட மூலம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர இந்த சட்ட மூலம் காரணமாக காணாமல் போனோரின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்குள் காணாமல் போனோர் தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் பரணகம ஆணைக்குழுவின் தகவல்களுக்கு அமைய 24000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், யுத்தத்தின் போது 5400 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் காணாமல் போயுள்ள காரணத்தில், அவர்களது உறவினர்கள் பாரிய சட்ட சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறிய அமைச்சர் சமரவீர, இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இவ்வாறான சிக்கல்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலத்தின் பிரகாரம் காணாமல் போயுள்ள ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் திரும்பி வராவிட்டால் அவர்களுக்கு இந்த காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள ஒரு நபர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால் அந்த நபரின் உறவினர்களுக்கு, இறந்த நபரின் இறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தள்ளார்

Related posts: