இலங்கையைவிட்டு நகர்கிறது புரவி சூறாவளி – புரவியின் தாக்கத்தால் வடக்கு கிழக்கில் அதிகளவு மழைவீழ்ச்சி – மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு!

Thursday, December 3rd, 2020

புரவி சூறாவளி இலங்கையைவிட்டு நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிற்கு மேற்காக 50 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி தற்போது நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் குறிப்பிட்டார்.

அத்துடன் சூறாவளியால் ஏற்பட்ட தாக்கம் தற்போது குறைவடைய ஆரம்பித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, சூறாவளியினால் 06 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் உள்ள மக்கள்அதிக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட மழை வௌ்ளம் காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புரவி சூறாவளியால் முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. துணுக்காய் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 392 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 405 குடும்பங்களை சேர்ந்த 1,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 282 குடும்பங்களை சேர்ந்த 722 பேர் 04 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வரகுமார் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தாழ்நில பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுத்தப்பட்டுள்ளனர்.

கனகாம்பிகை குளத்தை அண்மித்து வாழ்வோருக்கு ஏற்கனவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

எனினும் அதிகூடிய மழைவீழ்ச்சி பகுதிவாகியுள்ளமையால் ஏனைய சில குளங்களை அண்மித்து வாழ்வோருக்கும் அறிவித்தல் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச சபைக்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட ஏ9 வீதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தற்போது மழையுடனான வானிலை நிலவுகிறது. மாவட்டதின் தாழ்நில பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார்.

இதேவேளை, வவுனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் தற்போது மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு தொடர்ந்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அதிகாரி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: