கல்வி அதிகாரிகளின் பொறுப்பின்மையே சீருடை வழங்காமைக்குக் காரணம் ஆசிரியர் சங்கம்!

Thursday, December 20th, 2018

கல்வி அதிகாரிகள் தமது பொறுப்பை தட்டிக் கழித்ததன் விளைவாகவே பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், சீருடை வழங்கப்பட வில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இரு வாரத்துக்குள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அச்சங்கம் கோரியுள்ளது. எதிர்வரும் ஜனவரியில் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடசாலைப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதுபோல் மாணவர் காப்புறுதி செலுத்தப்படவில்லை.

தேசிய பாடசாலைகளில் 350 அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையும் முடிவடைந்துள்ளது. இருப்பினும் அதிபர்கள் நியமிக்கப்படவில்லை.

இவற்றை அரசியல் நெருக்கடியை காண்பித்து கல்வி அதிகாரிகள் செய்யாது விட்டுள்ளனர்.

உண்மையில் அமைச்சர்கள் அல்ல கல்வி அதிகாரிகளே மேற்படி விடயத்தைச் செய்ய வேண்டும். கல்வி அதிகாரிகள் தமது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளனர். எனவே இவற்றை இரு வாரங்களுக்குள் செய்து முடிக்குமாறு கோருகின்றோம்.

Related posts: