கலாசார சீர்கேடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது – ஆயர் தெரிவிப்பு

Saturday, May 7th, 2016
யாழ். குடாநாட்டில் போர்க்காலத்தில் காணப்பட்ட அச்ச நிலையை விட சமூக சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய கால கட்டத்தில் அச்சமும் பீதியும் அதிகம் காணப்படுவதாக யாழ். ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள், போதைப்பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற பல்வேறு விடயங்களால் யாழ். மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக யாழ். மறைமாவட்ட ஆயர் குறிப்பிட்டுள்ளார்

இந்த விடயத்தில் புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரிய தரப்பினர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முன்வருதல் அவசியமாகும் எனவும் ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களைத் தடுப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது எனவும் குற்றச்செயல்களுக்கு தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கை பாதுகாப்பவர்கள், அரசியல்வாதிகள் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க முன்வருதல் அவசியமாகும் எனவும் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

கல்வியால் மிகச் சிறந்த பிரதேசமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் இன்று கல்வியில் கீழ்நிலைக்குச் சென்றமைக்கு சமூகச் சீர்கேடுகளும் போதைப்பொருள் பாவனையுமே காரணம் என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: