கறுப்புப் பட்டியலில் இருந்த 5 அமைப்புகளின் தடையை நீக்கிய இலங்கை – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!

Friday, July 28th, 2023

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகியவற்றை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தடை செய்திருந்தார்.

அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 27 இன் கீழ் 11 அமைப்புகளைத் தடை செய்தார்.

இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது.

நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஐந்து குழுக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் முகமதியா ஆகிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங...
சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற வ...
சமுர்த்தி உத்தியோகத்தர் பேர்வையில் பண மோசடி - அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதேச செயலக அதி...