இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021

எமது நாட்டின் இஸ்லாமியர்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட து ஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

புத்த சாசன அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் –  “கடந்த 14 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வேலை செய்து வருகின்றேன். எனது செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கு கின்றனர். அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர். மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைப் புலிகள், பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு குறுகிய கால அறிவித்தல் மூலம் வெளியேற்றினார்கள்.

இவ்வாறு வெளியேற்றியவர்களை, பயங்கரவாதத்தை ஒழித்து மீண்டும் தங்களது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.

இதேவேளை புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது, அவர்கள் கேட்பதைக் கொடுத்து பிரச்சினையைத் தீர்க்குமாறு சிலர் கூறினார்கள்.

இப்படிப்பட்ட நிலையிலேயே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளால் எல்லா இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார். குறிப்பாக ஓட்டமாவடியில் இடம் ஒதுக்குவதில்கூட அவரின் ஒத்துழைப்பு கிடைத்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இஸ்லாமியர்களை ஏனைய சமூகத்தினர் சந்தேகத்துடன் பார்த்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான நிலைமையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: