கடற்படையினர் மீது தாக்குதல் – மதுபோதையில் சம்பவம்!

Wednesday, June 10th, 2020

அனலைதீவில் கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட இருவர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுபோதையில் இருந்த நால்வரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தியவர்களில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், மேலதிகமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு அனலைதீவு சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“அனலைதீவில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வரும் நிலையில், அது குறித்து மதுபோதையில் குழு ஒன்று கடற்படையினரிடம் முறையிடச் சென்றிருக்கின்றது.

எனினும், குழுவினரின் நிலையை அவதானித்த கடற்படையினர் இந்தச் சம்பவம் தொடர்பில் தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது, பொலிஸாரிடம் முறையிடுமாறும் தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் இருவர் மீது கற்களால் தாக்கி காயப்படுத்தியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் கடற்படை முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நால்வரில் ஒருவர், தன்னை கடற்படையினர் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதாக கூறப்படுகின்றது.

எனினும், ஏனைய மூவரும் தப்பியோடியுள்ள நிலையில், மேலதிகமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு அனலைதீவு சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: