கடந்த ஆறு மாதங்களில் 2,160 கொள்ளைகள், 217 கொலைகள் 730 க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்!

Saturday, July 7th, 2018

நாடெங்கும் கடந்த 6 மாதங்களுக்குள் 2 160 கொள்ளைச் சம்பவங்களும் 737 பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் 217 கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி, தர்மம், ஒழுக்கம் எல்லாம் சீரழிந்து விட்டதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் நல்லாட்சி என்ற பெயரில் கொடுமைகளே அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் விசேட ஊடகச் சந்திப்பு நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறுகையில்:

இன்று நாடெங்கும் அராஜகம் தலைதூக்கியுள்ளது. நாடெங்கும் இவ்வாறு கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் வடக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளன.

வடக்கில் நடைபெறும் சம்பவங்களைப் பார்த்தால் அங்கு இந்த அரசாங்கத்தின் ஆட்சி நடக்கின்றதா அல்லது வேறு வன்முறை ஆட்சி நடக்கின்றதா என்றே நினைக்க வேண்டியுள்ளது.

ஆறு மாதங்களுக்குள் மட்டும் 2,160 கொள்ளைகளும் 217 கொலைகளும் 737 பாலியல் வன்முறை மற்றும் ஏராளமான வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தினமும் அதிகரித்து வருகின்றது. அத்துடன் ஊழல் மோசடிகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: