ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Friday, August 27th, 2021

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முடக்கம் காரணமாக பொருளாதாரம் மற்றும் நாளாந்த சம்பளம் பெறுபவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்த தீர்மானத்திற்கு தனிப்பட்டமுறையில் தான் எதிராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்தோடு அனைத்து பிரஜைகளுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதே நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என கூறியமை மூலம் அரசாங்கம் முடக்கத்தை நீடிக்காது என புலப்படுகின்றது.

இதற்கிடையில் இன்று இடம்பெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் நாடு தழுவிய முடக்கத்தை நீட்டிப்பதற்கு பதிலாக சில பகுதிகளை மட்டும் முடக்குவது குறித்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறுதி முடிவை அறிவிப்பார் என அறியமுடிகின்றது.

அவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட ஜனாதிபதி செயலணியின் இன்றைய அமர்வின் போது நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவற்றை கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நூற்றுக்கு நூறு வீதம் முறையாக இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊரடங்குச் சட்டமானது புதிதாக நோயாளர்கள் உருவாவதைத் தடுக்கவும் வைரஸ் பரவலை தடுக்கவுமே என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலமே வைரஸ் பரவலை தடுக்க முடியும். அதனைக் கவனத்திற் கொண்டு மக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு செயற்படாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயற்பட தவறுவார்களானால் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
கொரேனா அச்சுறுத்தல் - உள்ளுராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுக முடியாமல் போனதா...
மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் - தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்ல...