ஒவ்வொருவரது வீட்டிலும் மழைநீர் சேகரிக்கும் தொட்டி அவசியம்!  

Sunday, March 25th, 2018

வடக்கில் வீடுகள் ஒவ்வொன்றிலும் மழை நீர் சேகரிக்கும் தொட்டிகள் கட்டாயம் காணப்பட வேண்டும். ஏற்கனவே வீடுகளில் வசிப்போர் கூரையிலிருந்து வரும் மழைநீரைச் சேகரிக்கும் தொட்டிகளை அமைக்க வேண்டும். புதிதாக வீடுகள் கட்டுவோர் கட்டாயம் குறித்த தொட்டியைக் கட்ட வேண்டும். வீடு கட்ட அனுமதி வழங்கும் பிரதேச, நகர சபைகள் இதில் கடும்பிடி பிடித்தல் வேண்டும் என சூழலியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கில் மழை பெய்தாலும் தண்ணீரை அதிகளவானோர் சேமிப்பதில்லை. வீட்டு வளவுக்குள் மழை நீர் தேங்கி நின்றால் ஏதாவது வழி செய்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர். அதனால் மழை நீர் நிலத்தில் சேகரிக்கப்படுவது – ஊடு புகவிடுவது குறைவாகவுள்ளது.

மழை நீர் அநியாயமாக கடலுக்குச் சென்று விடுகின்றது. மழை நீரைச் சேமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் பொதுமக்கள் அதில் எந்தளவு அக்கறை கொண்டுள்ளனர்?

இந்த விடயத்தில் பொதுமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். பொது மக்கள் விழிப்புணர்வு பெற்று செயற்படத் தொடங்கினால் மழை நீர் சேகரிப்பு இலகுவான விடயமாகிவிடும்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளைக் கட்டாயம் அமைத்தல் வேண்டும் என்று அதற்கான அனுமதியில் பிரதேச, நகர சபைகள் வலியுறுத்துவது சிறந்ததாக இருக்கும்.

மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதற்கான அனுமதி வழங்கும் போது வீடு கட்டும் வரைபடத்தில் மழை நீர் தொட்டிகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் குறிப்பிட்டளவானவர்களே அதனைச் செயற்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. அதனைச் சகலரும் செயற்படுத்த நடவடிக்கைகள் இனி எடுக்கப்பட வேண்டும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினர் இதில் அதிகளவில் பங்கு வகிக்கின்றனர். மழைநீர்த் தொட்டிகளை அமைப்பதைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக மழை நீரைச் சேமிக்க முடியும். அந்த நீரை ஆடைகள் துவைப்பதற்கோ, பூங் கன்றுகளுக்கோ ஏனைய தேவைகளுக்கோ பயன்படுத்த முடியும்.

வீட்டுக் கூரைகளுக்கு ஓடு இருப்பின் மழையின் போது அதிலிருந்து வரும் தண்ணீரைக் குடிக்க முடியும். சீற் போடப்பட்ட கூரை எனின் குடிக்கக் கூடாது. தவிர ஏனைய சகல தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

தீவகம் உட்பட தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களில் சிலர் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளை அமைத்துள்ளனர். அதன் மூலமாக அவர்கள் பயன்பெறுகின்றார்கள்.

எதிர்காலத்தில் தண்ணீருக்குப் பெரும் பற்றாக்குறை நிலவும் என்று நிபுணர்கள் பலரும் முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மழைநீரைச் சேகரிக்கத் தவறினால் எமது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: