ஒரு புத்திஜீவிகளின் தவறான ஆலோசனையே பி.சி.ஆர் பரிசோதனைகள் தாமதமடைய கரணமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, May 2nd, 2020

சில புத்திஜீவிகள் அரசாங்கத்திற்கு வழங்கிய பிழையான ஆலோசனைகளினால் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் தாமதமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய இரண்டு பேராசிரியர்களினால் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் காலம் தாழ்த்தப்பட்டது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இந்த நோய் பரவுகை அதிகம் எனவே கூடுதலான பரிசோதனை நடாத்த வேண்டியது அவசியமானது எனவும், வேகமாக பரிசோதனை நடாத்துவோம் எனவும் கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி அரசாங்கத்திடம் தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நோய்த் தொற்று அறிகுறிகள் தென்படாதவர்களின் மூலமாக நோய்க் காவுகை இருக்காது என சில பேராசிரியர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும், அவர்கள் வைரஸ் தொற்று பற்றிய நிபுணர்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன பேராசிரியர்கள் இந்த நோய்த் தொற்று பற்றி கூறியதாகவும் இதன்படி பரிசோதனைகள் நடத்த வேண்டிய அவசியமில்லை என்ற குறித்த புத்திஜீவிகளின் ஆலோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் இதனாலேயே வைரஸ் தொற்று பரவுகை அதிகரித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: