ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது – மாகாணசபை தேர்தல் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, April 5th, 2021

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் தேர்தல் முறைமைக்கு தீர்வு கண்டதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா மாகாணசபை தேர்தலை நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது.

இதற்கு கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக் கொள்பவர்கள் மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

தேர்தலை விரைவாக நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரவையில் யோசனை முன்வைத்துள்ளார். கட்சி தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து யோசனை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம் இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அனைத்து தரப்பினரது கருததுக்களும், யோசனைகளும் பரிசீலனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கத்திற்காக இரத்து செய்ய முடியாது என்றும் மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரனாணது. மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.

Related posts: