ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெஃபரல் அமைப்பு எதிர்வு கூறல்!

Thursday, March 16th, 2023

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு (பெஃபரல்) எதிர்வு கூறியுள்ளது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உரிமையை பறிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனினும், நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது என்று ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம், சதி செய்து வருவதாகவும், நாடாளுமன்ற வரப்பிரசாதத்துக்கு பின்னால் மறைந்திருந்து, நீதிமன்ற தீர்ப்பை சவால் செய்வதன் மூலம் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான பெஃபரெல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: