ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுஷ்டிப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, April 20th, 2020

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று  நாளையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் இதனை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரார்த்தனைகள் ஏப்ரல் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் கொழும்பு மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நடைபெற்றன.

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி, நாடு முழுவதும் காலை 8.45 மணிக்கு பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித்  ஆண்டகையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலை 8.47 மணிக்கு மணிகள் ஒலிக்கச் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துச் சந்தேக நபர்களையும் அவர்களின் தகுதிகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களைக் கைது செய்ய்யப்படுவார்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக பொலிஸ் விசாரணைக் குழுவினர் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் குறித்த குண்டுத் தாக்குதலுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக்கூறினாலும், அந்த தாக்குதலை மூடி மறைக்க முனைந்தாலும் அதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தங்களுக்குத் தொடர்பில்லை என சந்தேக நபர்கள் கூறினாலும் அதிலிருந்து விலகிவிட முனைந்தாலும் எந்தவித மன்னிப்பும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தாம் மன்னித்துள்ளதாக பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  கடந்த ஈஸ்ரர் தினத்தன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: