ஏப்ரல் 21 தாக்குதல்: 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்!

Wednesday, August 19th, 2020

ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலும் 18 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக சுமார் 100 விசாரணை அறிக்கைகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே விசாரணையை முறையாக முடித்த பின்னர் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக சட்டமா அதிபரினால் முழுமையற்ற விசாரணைக் அறிக்கைகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பி அனுப்பிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்

கடந்த ஜூன் 26 அன்று, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான 40 முழுமையற்ற விசாரணைக் அறிக்கைகளையும் கடந்த ஜூலை மாதம் 38 அறிக்கைகளை சட்டமா அதிபர் திருப்பி அனுப்பியிருந்தார்.

பல அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட விசாரணைகளாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையற்றவை, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கை முழுவதும் உள்ள 3 ஹோட்டல்களையும் 3 தேவாலயங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 500 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: