எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

Sunday, July 17th, 2022

எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தாலும், தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இன்றுமுதல் இலங்கை கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் தேசிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் www.fuelpass.gov.lk என்ற இணைத்தளம் மூலம் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் பதிவு நடவடிக்கைகளை மாத்திரம் ஆரம்பிக்க நாம் எதிர்ப்பார்கின்றோம்.

வாகனங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த வாகனத்தின் பதிவு இலக்கம் மற்றும் அதன் செஸி இலக்கத்திற்கு அமைய பதிவு செய்ய முடியும்.

அதன் பின்னர், இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களில் இது எப்போது நடைமுறையாகும் என்பது அமைச்சினால் அறியப்படுத்தப்படும்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய 2 நிறுவனங்களும் ஒரே வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

www.fuelpass.gov.lk என்ற இணையத்திற்கு பிரவேசித்து எந்தவொரு பிரஜையும் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுச் கடவுச்சீட்டு இலக்கத்தையோ உள்ளீடு செய்யலாம்.

அந்த 2 இலக்கங்களும் இல்லாவிட்டால் தமது வர்த்தக பதிவு இலக்கத்தை உள்ளீடு செய்து பதிவு செய்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட நபரின் பெயர், விலாசம், தொலைப்பேசி இலக்கம் என்பனவற்றுடன் தாம் பயன்படுத்தும் வாகனத்தின் விபரங்களை குறிப்பிட வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் இந்த இணையத்தில் பதிவு செய்ய முயற்சித்தால் சிக்கல் நிலை ஏற்படும். எனவே, எதிர்வரும் சில நாட்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. வாகனத்தை பதிவு செய்து உங்களது QR குறியீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொடுப்பனவு செலுத்தப்பட்ட முதலாவது டீசல் கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. மற்றுமொரு டீசல் கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளது. இதன்படி இரண்டு கப்பல்களில் இருந்தும் டீசலை தரையிறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் கொடுப்பனவு செலுத்தப்பட்ட பெற்றோல் கப்பலொன்று 18 ஆம் அல்லது 19 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளது.

அத்துடன், கொடுப்பனவு செலுத்தப்பட்டள்ள மற்றுமொரு பெற்றோல் கப்பல் எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளது.

இன்று டீசல் கப்பல் நாட்டுக்கு வரும் என்பதால், கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என தாங்கள் கூறுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோலும், டீசலும் தரையிறக்கப்பட்டதன் பின்னர், இந்த முறைமைக்கு அமையவே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

எனவே கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்.

எதிர்வரும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் வரையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமானது தற்போது முன்னெடுக்கப்படும் முறைமையை தொடர்ந்து முன்னெடுக்கும்.

இது நடைமுறையாக்கப்படும்போது, காரை வைத்திருக்கும் ஒருவர், அந்த காருக்காக வாரம் ஒன்றுக்கு கிடைக்கக்கூடிய எரிபொருளின் அளவு, உதாரணமாக 10 லீற்றர் அல்லது 5 லீற்றர் எனின், அதனை அந்த வாரத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வாரத்திற்குள் அதனைப் பெற்றுக்கொள்ள விட்டால் அடுத்த வாரத்துக்கு அந்த முறைமை தொடராது. வாராந்தம் இந்த முறையை மாறுபடும்.

நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளுக்கு அமைய இந்த கோட்டா முறைமையும் மாறுபடும். இந்த முறைமையுடன், வாகனம் பதிவு இலக்க முறைமையும் பயன்படுத்தப்படும்.

வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி, குறிப்பாக இரண்டு நாட்கள் எரிபொருளை வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் 0, 1, 2 முதலான இலக்கங்களில் பதிவு இலக்கம் நிறைவடையும் வாகனங்களுக்கும்,

3, 4, 5 முதலான இலக்கங்களில் பதிவு இலக்கம் நிறைவடையும் வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,

6, 7, 8, 9 முதலான இலக்கங்களில் பதிவு இலக்கம் நிறைவடையும் வாகனங்களுக்கு, புதன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு நடைமுறைகளும் உடனடியாக நடைமுறையாகாது. எரிபொருளின் அளவு துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு, பதிவு நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர் QR குறியீட்டுக்கு அமையவும், நாட்களின் முறைமைக்கு அமையவும் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதனூடாக தற்போது எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் மூன்றிலிரண்டு அளவானோர் இந்த எரிபொருள் வரிசையிலிருந்து நீங்கப்பட்டு, நிச்சயமாக வாரத்தில் இரண்டு நாட்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

இதேவேளை பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கு அவசியமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் ஏனைய அனைத்து வாகனங்களுக்கும், சிற்சில வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

அந்த வரையறைகள் தொடர்பான தீர்மானத்தை, எரிபொருள் பதிவு நடவடிக்கைகளின் பின்னர், எதிர்வரும் நாட்களுக்குள் அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதிகள் எரிபொருள் பெற்றுக்கொண்டு அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என குறித்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கோட்டா முறைமையை அறிமுகப்படுத்துவதின் முக்கிய நோக்கம் இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் ரீதியாக இயங்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

தொழில் நடவடிக்கைகளில் இயங்காத முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்களும், சில வேளைகளில் உந்துருளி செலுத்துநர்களும் இதனை வர்த்தகமாக முன்னெடுத்து வருகவதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: