எரிந்த மின் மாற்றிகள் தொடர்பான ஜப்பான் நிபுணர்களின் அறிக்கை 2 தினங்களில்!

Monday, March 21st, 2016

தீப்பற்றி எரிந்த மின் மாற்றிகள் தொடர்பில் ஜப்பான் நாட்டு விசேட நிபுணர்களின் அறிக்கை 2 தினங்களில் சமர்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவிக்கின்றது.

பியகம, மற்றும் கொடுகொட ஓபாத ஆகிய பகுதிகளில் உள்ள உப மின்உற்பத்தி நிலையங்களையும் ஜப்பான் நாட்டு விசேட நிபுணர்கள் சிலர் நேற்று (20) பார்வையிட்டனர்.

இதேவேளை பியகம மற்றும் கொடுகொட உபமின் உற்பத்தி நிலையங்களின் கண்காணிப்பிற்கு ஜே​ர்மன் நாட்டின் 2 விசேட நிபுணர்கள் இன்று (21) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர்
ரஞ்சித் சியபலாபிடிய தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பிலான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி பரிசீலனை நடவடிக்கைகள் இன்று (21) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார்.இந்நிலையில் பியகம உப மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின் மாற்றியொன்றை பொருத்தும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வரட்சியான காலப்பகுதியில் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: