எமது வாழ்வாதாரம் தொடர்பிலும் கருத்தில் கொள்ளுங்கள் – யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு!

Tuesday, August 2nd, 2016

நாங்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் எமது கடலில் பிடித்த பல மீன் வளங்கள் தற்போதில்லை. எத்தனையோ வகையான மீன் இனங்கள் வெளிமாவட்ட மீனவர்கள் எமது கடலில் அத்துமீறி மீன்பிடிப்பதால் அழிக்கப்பட்டு விட்டது. மீன் வளம் இவ்வாறு அழிந்து கொண்டு சென்றால் எமது அடுத்த தலைமுறை வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வது? வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நிலையில் எங்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எவரும் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை என யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்  வேதநாயகனிடம் சுட்டிக்காட்டினர்.

வெளிமாவட்ட மீனவர்கள் யாழ். குடாநாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (01-) யாழ். மாவட்ட அரச அதிபர் மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்  வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற போதே யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளால்  மேற்கண்ட விடயம் எடுத்துக் கூறப்பட்டது.

எங்கள் மீனவர்கள் சிறு வலைகளை வைத்துச் சிறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் எங்களுடைய கடல் வளத்தை நம்பித் தான் இருக்கிறோம். எங்கள் மீனவர்களிடம் ஆழ்கடலில் சென்று தொழில் செய்வதற்குரிய வசதியில்லை.இந்த நிலையில் வெளிமாவட்ட மீனவர் கள்  இரவு வேளையில் நூறு படகில் 500 அல்லது 600 பேர் வெளிச்சத்துடன் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதால் மீன்கள் அச்சப்பட்டு வெளியேறி அழிவடையும்.  கடலட்டை, சங்கு போன்றவை சேற்றுக்குள்ளிருந்து இரவு வேளையில் வெளியேறும் போது  வெளிமாவட்ட மீனவர்கள் அவற்றை இலகுவாகப் பிடித்துச் செல்கிறார்கள்.

இழுவைப்படகைப் பாவித்து நெடுந்தீவு, அனலைதீவு, நயினைதீவு, வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்களில் இழுவைப் படகு மூலம் சட்ட விரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால் மீனினம் எவ்வாறு கடற்பரப்பில் பெருகும்? எங்களுடைய யாழ். மாவட்டத்தில் 118 மீனவ சங்கங்கள்  காணப்படுகின்றன. இதில் இரண்டு சங்கங்கள் மாத்திரமே இழுவைப் படகுத் தொழிலைச் செய்கின்றது. ஏன் அவர்களுக்கு எதிராக இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தத் தொழிலில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர்களும் ஈடுபட ஆரம்பித்தால் நமது அடுத்த சந்ததியினர் வாழ்வாதாரத்திற்கு எங்கே போவது?  இழுவைப்படகு மீன்பிடியில் பெயர் போன நாடாகவிருந்த நோர்வேயில் கூட அந்நாட்டு அரசாங்கத்தால் இழவைப்படகுத் தொழில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எமது அரசாங்கம் இழுவைப் படக்குத் தொழிலை முற்றாகத் தடை செய்யாதது ஏன் எனவும் கேள்வியெழுப்பினர்.

Related posts: