கொரோனாவுடன் இளைஞர் தப்பி ஓட்டம் – தீவிர தேடுதலில் பொலிஸார்!

Friday, October 23rd, 2020

கொரோனா தொற்றுறுதியான நிலையில் கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேதவத்தை பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேருவளை மீன்பிடிதுறை முகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருவளை மீன்பிடி துறைமுகத் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இன்றையதினம் 281 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர் என கொரோனா கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணியில் 105 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். கொக்கல உணவகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக கொரோனா கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹோமாகம நகரில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோன தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அந்த விற்பனை நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தக நிலையத்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போதே அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாகலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அட்டன் மற்றும் தலவாகலை லிந்துலை நகரசபையினால் குறித்த விற்பனை நிலையங்கள் இன்று மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையங்களில் பணியாற்றியவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 309 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் 22 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய, 22 பேருக்கும், பேலியகொடை மீன்சந்தையின் 188 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 75 பேருக்கும், தனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதேவேளை, இலங்கையில் 14 ஆவது கொவிட் 19 மரணம் நேற்று சம்பவித்தது. ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமானதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: