எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலானது – சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்த இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

Sunday, April 10th, 2022

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .

இதேவேளை தொழிநுட்ப குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் என்பதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தினர், பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா, சத்திர சிகிச்சைகளுக்கு முன்னர் வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

000

Related posts: