ஊர்காவற்றுறை படுகொலை தொடர்பில் இரத்த மாதிரி பரிசோதனை!

Tuesday, March 21st, 2017

அண்மையில் ஊர்காவற்றுறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் தொடர்பான வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் மற்றும் அயல் வீட்டுக்காரரதும் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர்களது இரத்த மாதிரியை பெற்று அதனை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவத்தையடுத்து குறித்த கொலையை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர். அத்துடன் இவர்களது வழக்கு விசாரனையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் இவ் வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தபட்டிருந்தனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் அவர்களது அயல் வீட்டுக்காரரும் நீதிமன்ற அழைப்பின் பேரில் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை பொலிஸார், இவ் வழக்கு தொடர்பான விசாரனையை முன்னெடுத்து செல்வதற்கு குறித்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் மன்றில் முன்னிலையாகியிருந்த அயல் வீட்டுக்காரரதும் டி.என்.ஏ மாதிரி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கட்டளையை மன்று பிறப்பிக்க வேண்டும் எனவும் மன்றை கோரியிருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மற்றைய நபரிடமும் டி.என்.ஏ மாதிரியை பெற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை பெற்றுக்கொண்டதையடுத்து குறித்த இருவரையும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்திருந்தது.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறித்த இரு நபர்களிடமும் பெற்றுக்கொள்ளும் டி.என்.ஏ இரத்த மாதிரியை உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ கையளிக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்றானது பணிப்புரை பிறப்பித்திருந்தது. அத்துடன் இவ் வழக்கு விசாரனையை நாளைய தினம் வரை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை கடந்த வழக்கு தவனையின் போது குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரின் இரத்த மாதிரியை இன்றைய தினம் பெற்றுக்கொள்ளுவதற்கு குறித்த சந்தேகநபரை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்த சிறைச்சாலை அதிகாரிக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: