ஊடக அமைச்சர் இம் மாத இறுதியில் மூன்று நாள் பயணமாக யாழ். வருகிறார்

Monday, March 14th, 2016

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் யாழ்.ஊடக அமையத்தின் பிரதிநிதிகளால்  யாழ்ப்பாணத்துக்கு  வருகை தருமாறு  ஊடக அமைச்சருக்குப் பகிரங்க அழைப்பொன்றை விடுத்ததன் அடிப்படையில் ஊடக அமைச்சர், பிரதி ஊடக அமைச்சர், ஊடக அமைச்சின் பிரதானிகள், ஊடக செயற்பாட்டு அமைப்புக்கள் ஆகியோர்  மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

இம் மாதம் 26 ஆம் திகதி   யாழ்ப்பாணம் வருகை தரும் அவர்கள் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்ட நிர்மாணத்துக்கான  அடிக்கல் நாட்டல், ஊடகவியலாளர்களுக்கான மோட்டார்ச் சைக்கிள் வழங்கல்,பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை, குடும்பங்களைச்  சந்தித்துக் கலந்துரையாடல், ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், வடமாகாண ஆளுநர், முதலமைச்சர், மதத் தலைவர்கள்,முப்படைத் தளபதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடுதல் போன்ற பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வு தொடர்பில் இன்று திங்கட்கிழமை(14-03-2016) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ஊடக சுதந்திரத்துக்கான  செயற்பாட்டுக் குழுவின் பிரதம இணைப்பாளர் பெரடி கமகே கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்குக் கிழக்கு ஊடக அமைப்புக்க்களை ஒன்றிணைத்துச் செயற்பட முடியாததொரு காலகட்டமிருந்தது. தற்போதைய ஆட்சிக் காலத்தில் வடக்குக் கிழக்கை இணைத்து ஊடக செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய நல்லதொரு சமிக்ஞை தோன்றியுள்ளது.

குருநாகலில் நடந்த நிகழ்வொன்றில் யாழ்.ஊடக மையம் ஊடக அமைச்சரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை நாங்கள் ஊடக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் அந்த வேண்டுகோளுக்கு இணங்கியிருந்தார். ஊடக அமைச்சின் அனுசரணையில் தகவல் திணைக்களம், ஊடக சுதந்திரத்துக்கான ஒருங்கிணைப்புக் குழு, யாழ்.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த மாதம் – 26 ஆம்,27 ஆம்,28 ஆம் ஆகிய மூன்று தினங்களிலும் ஊடக அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டுப் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விஜயம் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடும் நிகழ்வாக மாத்திரம் அமையாமல் ஊடகவியலாளர்களின் நலன்கள் தொடர்பில் ஆராயும் வகையிலும் அமையவுள்ளது. உதவிகள் பெற்றுக் கொடுப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டதாக அல்லாமல் ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்-10 ஆம்  திகதி உலக மனித உரிமை தின நிகழ்வில் கொல்லப்பட்ட, காணாமற் போன, பாதிக்கப்பட்ட 44 ஊடகவியலாளர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை யாழ்.ஊடக அமையம் எம்மிடம் கையளித்திருந்தனர்.  மறுதினம் பிரதமர் இது தொடர்பான விபரங்கள நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த வகையில் இது ஒரு ஆரம்ப நிகழ்வே. இதற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களை தெற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வை நடாத்தவுள்ளோம். அதன் பின்னர் எதிர்வரும் யூலை மாதமளவில் கிழக்குப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். இதற்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related posts: