சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் – உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 18th, 2022

நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற சபை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று முழு நாடாளுமன்றமும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மேலும் கூறியதாவது,

இன்று நாடாளுமன்றமே அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.  அன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக, எமது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எம்முடன் இணைந்து செயற்பட்டார்.

இப்போது அவரும் தாக்கப்பட்டுள்ளார். பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. காலியில் ரமேஷ் பத்திரணவின் வீடும் தீவைக்கப்பட்டது. சந்திம வீரக்கொடியின் வீடும் தீவைக்கப்பட்டது. விஜேபால ஹெட்டியாரச்சியின் வீடும் தீவைக்கப்பட்டது. என்ன நடந்தது என்று தேட வேண்டும்.

எந்தப் பக்கத்தில் இருந்தாலும் இந்த விளையாட்டு தொடர்கிறது. தங்களுக்கு பிடிக்காவிட்டால் தீவைக்கும் நிலை உள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். எமக்கிடையில் வேறுபாடு இருக்கலாம். நான் காட்டிக் கொடுத்தாக கருதலாம்.

மக்கள் ஏன் நாடாளுமன்றத்தை குறை கூறுகின்றனர். நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும். நாடாளுமன்ற சபை ஒன்றை உருவாக்க வேண்டும். தேவையான விடயங்களை ஆராய்ந்து இணைந்து செயற்படலாம். நாடாளுமன்ற கலாசாரத்துடன் தொடர்ந்து செல்ல முடியாது. 225 எம்.பிக்களும் வேண்டாமென மக்கள் கூறுகின்றனர்.

எனவே நாடாளுமன்ற சபையை உருவாக்கி செயற்படுவோம். இந்த கலாசாரத்தை மாற்ற இருதரப்பிடமும் கோருகிறேன். விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். எம்.பிக்களின் ஒழுக்கக் கோவை மற்றும் நிலையியற் கட்டளை என்பவற்றை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் காலிமுகத்திடல் சம்பவத்தை கண்டித்துள்ளேன். சத்தம் போடும் எத்தனை பேர் என்னிடம் வந்து அமைச்சு பதவி கோரியுள்ளனர்? பிரதி சபாநாயகர் தெரிவில் எனது தொடர்பு கிடையாது. இம்முறை நடந்த வாக்கெடுப்பிலும் எனக்கு தொடர்பு கிடையாது.

சபாநாயகர் தலைமையிலான கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. வந்திருந்தால் தெரிவு செய்வது தொடர்பாக யோசனை முன்வைத்திருப்பேன். பெண் ஒருவர் தெரிவாவதை நானும் விரும்புகிறேன். அதற்கு என்மீது குற்றஞ்சாட்டி பயனில்லை. நான் ஆளும் தரப்பிலும் இல்லை. எதிரணியிலும் இல்லை. பாலத்தின் மேல் இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: