உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர்!

Tuesday, October 1st, 2019

வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் பல ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணியாற்றியவர்களை கைவிட்டு தற்போது புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பலர் 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணியாற்றுகின்றனர். சிலர் 15 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த இடங்களுக்குத் தேவையான ஆசிரியர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சால் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆளனி அங்கீகாரமாக 51 பேரே நியமிக்க முடியும். ஏற்கனவே 11 பேர் நிரந்தர ஆசிரியர்களாக பணியில் உள்ளனர். எஞ்சிய 41 வெற்றிடங்களுக்கம் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 41 வெற்றிடங்களில், தற்காலிகமாகப் பணியாற்றி வந்த எவரும் உள்வாங்கப்படவில்லை.

அதனால் தாம் நிர்க்கதியாகியுள்ளோம். 20 அல்லது 25 வயதில் இணைந்த நாங்கள் தற்போது 40 வயதை எட்டிய நிலையில் எந்த முன்னேற்றமும் இன்றி பணி இழக்கும் நிலையை எதிர் கொண்டுள்ளோம். இவ்வாறு தற்போது 16 ஆசிரியர்கள் உள்ளோம். இதற்கு ஏதாவது மாற்று வழி செய்ய வேண்டும் என்ற அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் உள்ளூராட்சித்திணைக்கள அதிகாரிககள் கூறுகையில் – உள்ளூராட்சி சபைகளில் நிலவிய குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு முதலில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. பணியிலிருந்த ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு தமக்கு 35 வயது தாண்டியுள்ளது. விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தை இழக்கின்றோம் என்ற சுட்டிக்காட்டினார். மீள விளம்பரம் கோரும் போது வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்போது குறித்த 16 பேரில் 11 பேர் விண்ணப்பித்தனர்.

இருப்பினும் எழுத்துப்பரீட்சையில் அவர்கள் சித்தியடையவில்லை.
எழுத்துப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் சிலர் செயல்முறைப் பரீட்சைக்கு உட்படுத்தியபோது க.பொ.த உயர்தரத்துடன் டிப்ளோமா தாரிகள் அதிகம் தேர்வாகியுள்ளனர் எனப் பதிலளித்தார்.

Related posts: