உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022

உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் எனவும் அது தொடர்பில் எதிர்க் கட்சி பதற்றமடையத் தேவையில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் இப்போது செப்டெம்பர் மாதம் என்பதால் அதற்கு இன்னும் காலம் உண்டு என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், உரிய காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஜே.சீ.அலவத்துவல எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமது கேள்வியின் போது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் உறுதியான பதில் அளிக்க வேண்டுமென சபையில் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு நாங்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக, தேர்தலை நடத்துவதற்கு இன்று (21) முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: