உள்ளக முரண்பாடுகளால் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை!

Sunday, July 5th, 2020

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை காணப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகொன்றை நிறுவி அதனூடாக சுற்றுலா, விருந்தோம்பல் முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான பாடத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வணிக, முகாமைத்துவ பீடச் சபை, பல்கலைக்கழக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உள்ளகத் தர நிர்ணய அலகின் பரிந்துரையுடன் 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அதன் 1023 ஆவது கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகங்களில் 2019 / 2020 கல்வி ஆண்டுக்கு சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பமும் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான கையேட்டின் மூலம் கோரப்பட்டிருந்தது.

எனினும், பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகு ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. நிலமைகளை ஆராய்ந்து கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வதற்காக பேரவையினால் இரண்டு முன்னாள் துணை வேந்தர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு பீடத்தின் உள்ளக முரண்பாடுகளினால் எமது பகுதிக்கு வர வேண்டிய வளங்கள் வீணாய்ப் போகின்றன என்று வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

Related posts: