உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023

உலகிலேயே மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வரிகள் மேலும் குறைக்கப்பட்ட போதும், இலங்கையினால் அதனை கையாள முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகியதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வு ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைகையிலே சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டமானது பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதுடன் வருமானத்தை அதிகரிப்பதும் முக்கிய அங்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுவதே திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று எனவும், அந்த நோக்கத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் பீட்டர் ப்ரூயர் வலியுறுத்தினார்.

அத்துடன், விரைவான பணவீக்கம் மற்றும் நிதி வருமானம் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து அதிகரித்து வருவதன் காரணமாக சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பலனைத்தர ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாத இறுதியில் திட்டத்தின் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதுடன், செலவீன மீதிகள் தவிர அனைத்து செயல்திறன் அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும், வரி வருமானம் தவிர அனைத்து குறிப்பான இலக்குகளும் எட்டப்பட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: