உலகில் அதிக இரத்ததானம் செய்பவர்கள் இலங்கையர்கள்!

Thursday, June 16th, 2016

வருடமொன்றிட்கு இலங்கையர்கள் நான்கு லட்சம் பேர் இரத்தம் வழங்குவதாகவும், நாட்டின் சனத்தொகையில் நூறில் இரண்டு பேர் இரத்தம் வழங்குவதற்கு முன்வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

“உங்கள் ஒரு துளி இரத்தம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்” எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய வலய நாடுகளுக்கு ஆண்டொன்றிட்கு அதிகளவான இரத்தம் தேவைப்படுவதாகவும், இலங்கையர்கள் 4 இலட்சம் பேர் இரத்தம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே இரத்த தானம் செய்பவர்களுள் இலங்கையர்கள் முன்னிலையில் உள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு அதிகம் கௌரவம் கிடைப்பதாகவும், இரத்த தானம் செய்வதற்கு தமிழ் சிங்களம், முஸ்லிம் என அனைத்து இனத்தினரும் முன் வந்து இரத்த தானம் செய்வது சுகாதார துறைக்கான சிறப்பம்சம் எனவும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இலங்கை பூராகவும் 96 இரத்ததான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 19 இரத்ததான நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் அமைதியான சூழலே காரணம் எனவும், இரத்தானம் செய்ய முன்வருபவர்கள் முன்னுதாரணமாக போற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுரைக்கமைய என்பு மாற்று சிகிச்சை நிலையம் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னும் 4 மாதங்களில் இந்த திட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்ததுடன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலையிலும் குறித்த என்பு மாற்று சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பானது 2020ஆம் ஆண்டளவில் இலவசமாக இரத்தம் பெறுவதற்கு தீர்மானித்துள்ள போதும் இலங்கையில் இந்த செயல்பாடானது 2014ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Related posts: