சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!

Sunday, February 28th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட நிலைமை குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ். மாவட்டத்தில் தற்போது மொத்தமாக 300 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 513 குடும்பங்களைச் சேர்ந்த 987 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமைபோல் பொதுமக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இருந்தபோதிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 150 பேர் மாத்திரம் பங்குபற்றும் நிகழ்வுகளை நடத்த சுகாதாரப் பிரிவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தற்போதைய நிலையில் மிக அவதானமாக இருப்பது முக்கியமாகும். முதலில் வெளிமாவட்டத்திலிருந்து வருவோரால் மாத்திரமே தொற்று பரவுவதாக கருதப்பட்டது. எனினும், தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ளோரால் தொற்று உறுதிசெய்யப்படுகின்ற நிலை மிகவும் அபாயகரமானது.

இந்நிலையில், நாளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராகவும் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சைக்குரிய சகல ஏற்பாடுகளும் கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த அவர்  தற்போதுள்ள நிலைமையை உணர்ந்து மாணவர்கள் தங்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். அத்தோடு, அங்கு கடமை புரிகின்ற ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் அவர்களுக்குரிய வழிகாட்டல்களை முன்னெடுப்பார்கள்” எனவும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது.

Related posts: