முகக்கவசம் அணியாத இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபா அபராதம் – பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, November 9th, 2021

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு நேரம் நடமாடிய இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

முன்பதாக நாட்டில் கொரோனா ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்தபோது முகக்கவசம் அணியாமல் நடமாடிய ஒருவரும், ஊரடங்கு சட்டத்தை மீறியும், முகக்கவசம் அணியாமலும் பொது இடத்தில் நின்ற மற்றொருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கில் இருவரும் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து முகக்கவசம் அணியாத நபருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாததுடன் ஊரடங்கு சட்டத்தையும் மீறி நடமாடிய நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றத்தின் நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: