உலகப் போராட்ட வரலாறுகளில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்களை ஈழப்போராட்டத்தில் ஆற்றிய நம் தலைவர்கள்!  – EPRLF தேசிய மாநாட்டில் EPDP கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, April 5th, 2016

உலகின் விடுதலைப் போராட்ட வரலாறுகளில்; எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்கள் ஈழ விடுதலைப் போராட்டங்களில் மட்டும் தான் நடந்திருக்கின்றது.  தமது உடலிலே ஓடுகின்ற குருதியை விற்று விடுதலைப் போராட்டத்தை நடத்திய மாபெரும் உன்னத தியாகங்கள் எமது ஈழ விடுதலைப் போராட்டத்திலேயே நடந்திருக்கின்றது. அதை நடத்திக்காட்டியது ஈழமக்கள் புரட்சிகர் விடுதலை முன்னணிதான்.

தோழர் நாபாவும்(பத்மநாபா) தோழர் தேவாவும்(டக்கிளஸ் தேவானந்தா) தமது குருதிகளை தமிழ் நாட்டின் மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளில் அடிக்கடி விற்று அதன்மூலம் போராளிகளை பராமரித்து ஒரு உரிமைப் போராட்டத்தை நடத்திய மாபெரும் அர்ப்பணங்பளுக்கு சொந்தக்காரர்கள் என்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா)யின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதியாக குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு அவரது ஆசிச்செய்தியை வாசித்தபின் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான உரையை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்.

சுகுத் தோழர் அவர்களுக்கும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் அவர்களுக்கும் அன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில் ஈபிஆர்எல்எவ் சார்பாக ஈழப்பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளராக இருந்த தோழர் ஞானசக்தி ஸ்ரீதரன் (அக்காத் தோழர்) அவர்களுக்கும் மோகன் தோழர் அவர்களுக்கும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஈபிஆர்எல்எவ் தோழர்களுக்கும் மற்றும் சக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பாகவும் எனது தோழமை உள்ள வணக்கங்கள்.

நான் செயலாளர் நாயகம் அவர்களின் ஆசிச்செய்தியோடு மட்டுமன்றி அவரது சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் இன்னும் சில கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

1986 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி புலிகள் இயக்கத்தால் தடைசெய்யப்பட்டது. இன்று அரசியல் அரங்கில் தீர்மானங்களை எடுப்பதில் 1986 இற்குப் பின்பு பிறந்தவர்களே சரிபாதி அளவில் பங்காற்றி வருகின்றார்கள்.

துரதிஸ்டவசமாக இவர்களுக்கு தோழர் பத்மநாபா அவர்களின் போராட்ட வரலாறு தெரியாது. தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் போராட்ட வரலாறு தெரியாது. தோழர் சுகு அவர்களின் போராட்ட வரலாறும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.

ஈபிஆர்எல்எவ் இயக்கத்திலிருந்து கைது செய்யப்பட்டு சுகுத்தோழருடன் நானும் படை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் இருந்தவன். அவரது விடுதலைப் போராட்ட மன உறுதியை நான் அவருடன் கூடவே சிறையிருந்த நாட்களில் கண்டிருக்கின்றேன்.

படை முகாம்களில் நான் சுகுத்தோழருடன் ஒன்றாக இருந்தபோது படை அதிகாரிகள் நாங்கள் உட்பட அனைத்துக் கைதிகளையும் தமது அலுவலகத்தில் அழைத்து அரசியல் விவகாரங்கள் குறித்து எங்களுடன் பேசுவார்கள்;. அப்போது படை அதிகாரிகள் கேட்பார்கள் உங்களுக்கு ஈழம் தேவையா? என்று. அங்கிருந்தவர்கள் சகலரும் மௌனித்திருப்பார்கள். ஆனாலும் எங்கள் இயக்கத்தின் தலைமையின் உறுதியை ஏற்று ஒரு மெலிய மனிதர் மட்டும் எங்களுக்கு ஈழம் வேண்டும் என்று தனது கைகளை உயர்த்துவார்.

அது வேறு யாருமல்ல சுகுத்தோழர் தான். ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகள் அல்லது வெடிகுண்டுகள் வெடிப்பதைவிடவும் ஒரு கருத்தின் சக்தி மேலானது. அந்தக் கருத்தின் வலிமையை ஒத்தவர் சுகுத்தோழர். அவர் இன்று மீண்டும் இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பாகவும் எமது கட்சியின் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பன எழுதிய மையின் குருதியின் ஈரம் காய்வதற்கு முன்பாக கிழித்தெறியப்பட்டன. ஆனாலும் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றுவரை நீடித்து நிலைத்து நிற்கின்றது.

அதற்கு காரணம் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னணியில் எமது அயல் உலக நட்பு நாடாகிய இந்தியா பக்கபலமாகவும் இருந்திருக்கின்றது. ஆகவேதான் அந்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்து நிலைத்திருக்கின்றது. இதை நாம் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். எமது அரசியல் இலக்கு நோக்கி வளர்த்தெடுத்து செல்லவேண்டும்.

இன்று புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பயினராகிய நாமும் யோசனைகளை சமர்ப்பித்திருக்கினறோம்.

புதிய அரசியலமைப்பை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கின்ற றிம்மர் மண்டபத்தின் தூண்கள் பழையது என்றும் பழுதானது என்றும் நாம் கருதுவோமேயானால், பழுதான பழைய தூண்களை அறுத்து வீழ்த்திவிட்டு புதிய தூண்களை நாம் உருவாக்குவது உகந்த வழிமுறையல்ல. அதுபோலவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் தவறானது என நாம் கண்டுகொண்டால் அதை முழுமையாக நிராகரித்து விட்டு புதிய அரசியலமைப்பு மாற்றத்தை மட்டும் கொண்டுவர எத்தனிப்பது அரசியல் தொலைதூர நோக்கமற்ற செயலாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பதை பாதுகாத்துக்கொண்டே புதிய அரசியலமைப்பு மாற்றங்களை நாம் கொண்டுவர வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே மயிலே இறகு போடு என்று யாரிடமும் நாம் யாசகம்  கேட்டு கைநீட்டிப்பெற்றுக்கொண்ட பிச்சை அல்ல. மாறாக நாம் போராடிப்பெற்ற எமது மக்களுக்கான மாபெரும் சொத்து. கட்டிய வேட்டி கூட கசங்காது வியர்வைகள் கூடச்சிந்தாமல் வெறும் வாய்ப்பேச்சில் மட்டும் அந்த ஒப்பந்தம் உருவானதல்ல.

நாம் போராடியபோது ஓரத்தில் நின்று கைதட்டி ஒரு ஆதரவைக்கூட தெரிவிக்காதவர்கள் இதற்கு உரிமை கோர முடியாது.

அல்ஜீரிய தேசத்துக் கவிஞர் ஒருவன் சொன்னான் பசியெடுத்தால் இடது கையை கடித்துக்கொண்டு வலது கையால் போராடுவோம் என்று. அது வெறும் உணர்வுகள் மட்டும்தான்…

சீனப் புரட்சியின்போது சொன்னார்கள் பசித்தால் புற்களையும் புசித்துக்கொண்டு போராடுவோம் என்று. அதுவும் உணர்வுகளின் வெளிப்பாடுதான்.

ஆனாலும் உலக விடுதலைப் போராட்டங்களில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்கள் ஈழ விடுதலைப் போராட்டங்களில் மட்டும்தான் நடந்திருக்கின்றது.  தமது உடலிலே ஓடுகின்ற குருதியை விற்று விடுதலைப் போராட்டத்தை நடத்திய மாபெரும் அளப்பரிய தியாகங்கள் எமது ஈழ விடுதலைப் போராட்டத்திலேயே நடந்திருக்கின்றது.

அதை நடத்தியது ஈழ மக்கள் புரட்சிகர் விடுதலை முன்னணி என்ற ஈபிஆர்எல்.எவ் தான்.

தோழர் நாபாவும் தோழர் தேவாவும் தமது குருதிகளை தமிழ் நாட்டின் மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளில் விற்று அதிலிருந்து கிடைத்த நிதிகளைக் கொண்டு போராளிகளை பராமரித்து ஒரு உரிமைப் போராட்டத்தை நடத்திய அர்ப்பணங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பதை இந்த மாநாட்டினூடாகவும் நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறு நாம் போராடிப்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாத்து மேலும் பலப்படுத்தி எமது அரசியல் இலக்கு நோக்கி செல்லவேண்டும் என்பதையே நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். எது யதார்த்தமான வழிமுறையோ அதையே நாம் வரவேற்போம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாத்துக்கொண்டே புதிய அரசியலமைப்பையும் நாம் வரவேற்கவேண்டும்.இதையே இந்த மாநாட்டினூடாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக அனைத்துத் தமிழ் பேசும் கட்சிகளை நோக்கியும் அறைகூவல் விடுக்கின்றேன்.

இவ்வாறு மேலும் அந்த உரையில் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

Related posts: