உருளைக்கிழங்கு விநியோகத்தில் பாகுபாடு – யாழில் விவசாயிகள் குற்றச்சாட்டு!

Saturday, December 15th, 2018

யாழ். மாவட்டத்தில் சம்மேளனங்கள் ஊடாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு விநியோகத்தில் அரச அதிகாரிகளால் பாகுபாடு காட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரசாங்கத்தால் 50 வீத மானிய அடிப்படையில் பழைய பதிவில் உள்ள விவசாயிகளுக்கு 3 அந்தரும் புதிய பதிவில் உள்ளவர்களுக்கு இரண்டு அந்தரும் உருளைக்கிழங்கு வழங்கப்படும் எனத் தெரிவித்த போதும் அவ்வாறு வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

உருளைக்கிழங்குச் செய்கையில் அதிக விளைச்சலைத் தருகின்ற “றெட்வெட்சோடா” (சிவப்புக் கிழங்கு) தாம் தொடர்ந்து பயிரிட்டு வந்ததாகவும் இதன்மூலம் அதிக விளைச்சலையும் வருமானத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது “பரா” என்ற இனக் கிழங்கையே தமக்கு கூடுதலாக விநியோகித்ததாகவும் இக் கிழங்கின் விளைச்சல் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தனர்.

உருளைக்கிழங்கு விநியோகத்திற்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி பணத்தை செலுத்தி இம் மாதம் 10 ஆம் திகதியே உருளைக்கிழங்கை தாம் பெற்றதாகவும் தமக்கு உரிய பதிவின்படி கிழங்கு வழங்கப்படவில்லை என கடந்த மாதம் 22 ஆம் திகதியில் இருந்து கிழங்கைப் பெற்ற திகதி வரை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: